நாங்கள் யார்

சுகாதாரக் கல்வி, சுகாதார மேம்பாடு மற்றும் சுகாதாரத் தகவலிற்கான பிரச்சாரம் என்பவற்றிற்கான கேந்திர நிலையமாக சுகாதாரக் கல்விப் பணியகம் விளங்குகின்றது. சுகாதார மேம்பாட்டுக் கொள்கைகள் மூலம் சமுதாயத்திற்கு வலுவூட்டி, அவர்களுடைய பங்களிப்புடன் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதே கடந்த வருடங்களில் நாம் அடையப்பெற்ற சாதனைகளாகும். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவராக சுகாதாரக் கல்வி மற்றும் பிரச்சாரத்திற்கான பணிப்பாளர் விளங்குகின்றார். இவரிற்கு உதவியாகப் பிரதிப் பணிப்பாளர், சமுதாய மருத்துவ நிபுணர்கள் குழு, சமுதாயப் பற்சிகிச்சை நிபுணர், வைத்திய அதிகாரிகள், பல்வைத்திய அதிகாரிகள், பிரதம சுகாதாரக் கல்வி அதிகாரி, நிர்வாக மற்றும் உதவிநிலை உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றார்கள். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தால் தயாரிக்கப்பட்ட தேசிய சுகாதார மேம்பாட்டுக் கொள்கை, போஷாக்கு மற்றும் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கான தொடர்பாடல் மூலோபாயங்கள் போன்றன பல்வேறு தரப்பினர் அடைய வேண்டிய பொதுவான இலக்குகளையும், தரமான சுகாதார வழிகாட்டிகளையும் வழங்குகின்றன. பொதுமக்களிடையே ஆரோக்கிய நடத்தை மாற்றங்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியத்தால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற ஊடகவியலாளர் சந்திப்பானது ஒரு தனித்துவமான சேவையாக இருப்பதுடன் பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

about

இதற்கும் மேலதிகமாக சுகாதார மேம்பாடு மற்றும் ஆரோக்கிய நடத்தை மாற்றம் என்பன பற்றிய மக்களுக்குள்ள விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக சுகாதார மேம்பாட்டுப் பணியகமானது சுகாதாரக் கண்காட்சிகள், தேசிய நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் சமுதாய நிகழ்வுகளில் பங்கு கொள்கின்றது. டெங்கு, எலிக்காய்ச்சல், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் தொற்றா நோய்கள் போன்ற பெருகிவரும் சுகாதாரப் பிச்சினைகளைப் பற்றி மக்களிடையே உள்ள அறிவைப் பெருக்குவதற்காக பலதரப்பட்ட சுகாதாரக் கல்விச் சாதனங்கள் தயாரித்து வெளியிடப்பட்டுள்ளன. வைத்தியசாலைகள், பாடசாலைகள், கிராமங்கள், வேலைத்தலங்கள் போன்ற பொது இடங்களையும், வீடுகளையும் சுகாதார மேம்பாட்டு மாதிரிகளாக முன்னேற்றுவது சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் இன்னுமொரு வெற்றிகரமான நிகழ்ச்சித்திட்டமாகும். பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு பயிற்சிகளுக்கு மேலதிகமாக சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதார மேம்பாட்டில் ஈடுபாடுள்ளோருக்கு தொடர்ச்சியான சேவைக்காலப் பயிற்சிகளையும் சுகாதார மேம்பாட்டுப பணியகம் வழங்கிவருகின்றது.

about

ஆலோசனைக் குழுக்கள், பயிற்சிப் பட்டறைகள், ஆராய்ச்சிகள், மதிப்பாய்வுகள் போன்றவற்றிற்கு வேண்டிய தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது மட்டுமன்றி பல்வேறுபட்ட பொது அமைப்புகளின் அழைப்பினை ஏற்று தனது நிபுணத்துவத்தையும் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் பகிர்ந்து கொள்கின்றது. "சுவசரிய" எனப்படுகின்ற சுகாதார உதவித் தொடர்பானது. ஆரோக்கியம் சம்பந்தமான மக்களின் சந்தேகங்களுக்கு விரைவானதும், இலகுவானதுமான ஆலோசனைகளை தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக மும்மொழிகளிலும் வழங்கிவருகின்றது. இதன் ஒரு அம்சமாக சுகாதாரம் பற்றிய தகவல்கள் அடங்கிய மும்மொழியிலான இணையத்தளம் விளங்குகின்றது. ஒருங்கிணைந்த பலதரப்பட்ட அணுகுமுறையின் அடிப்படையில் சுகாதார மேம்பாட்டிற்காக, சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வழங்கிவரும் பங்களிப்பானது மிகவும் வெற்றிகரமானதாகவும், அதேவேளை பாராட்டுக்குரியதாகவும் விளங்குகின்றது.

வரலாறு

நம் நாட்டில் சுகாதாரக் கல்விச் சேவைகள் இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே தோற்றம் பெற்றன. ஆரம்பக் காலகட்டத்தில் இது சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பொதுசன சுகாதார அலகின் ஒரு சிறிய பகுதியாக இரண்டு பிரிவுகளாக இயங்கிவந்தது. பிரதம சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர் எனும் பதவியிலுள்ள சமூகவியலாளர், ஒரு சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர், இரு பிரச்சார உத்தியோகத்தர்கள் ஆகிய நால்வருமே இதன் ஒரு பிரிவான தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்கள். மற்றய பிரிவான சுகாதாரக் கல்வி உபகரண உற்பத்தி அலகில் பயிற்றப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பணியாற்றினார். பொதுக் கூட்டடங்கள் நடாத்துதல், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், சிற்றேடுகள் என்பவற்றை விநியோகித்தல் போன்ற செயற்பாடுகள் மூலமாக அக்காலத்தில் மிகவும் பொதுவான தொற்று நோய்களான மலேரியா, புழுத்தொற்று, வயிற்றோட்டம், நெருப்புக் காய்ச்சல் போன்றவற்றைத் தடுப்பதே இதன் பிரதான குறிக்கோளாக இருந்தது. 1950 களின் போது வெளியிடத் தொடங்கிய "சபத" எனும் சஞ்சிகையானது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவை விருத்தி செய்வதற்கு உதவியாக இருந்ததது. அடுத்த முக்கிய படியானது மாவட்ட அளவிலான பிரிவுகளைத் தோற்றுவித்தமையும், அதற்குப் பொறுப்பாக, சுகாதாரக் கல்வியை வழங்குவதற்குப் பயிற்றப்பட்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஒருவரை சுகாதாரக் கல்வி வழங்குனர் எனும் பதவியின் கீழ் அப்பிரிவிற்குப் பொறுப்பாக நியமித்தமையும் ஆகும். மத்திய தலைமைப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் தத்தமது மாவட்டங்களிற்கான சேவைகளுக்குப் பொறுப்பாக இவர்கள் விளங்கினர். ஒலி/ஒளி உபகரணங்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழங்கப்பட்டன. சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்களின் பிரதான பணி தகவல் பரப்புவது எனினும், அவர்கள் மேலதிகமாக வெளிக்கள சுகாதார உத்தியோகத்தர்களிற்கு கல்வி கற்பித்தல் சாதனங்கள் மற்றும் வழிகாட்டுதலை வழங்கியதன் மூலம் அவர்களுடைய சுகாதாரக் கல்வி நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்தனர். சுகாதாரக் கல்வியில் முதுகலைத் தகைமைகளைக் கொண்டுள்ள, நிர்வாகத் தர வைத்திய அதிகாரி ஒருவரை இப்பிரிவிற்குப் பொறுப்பாக நியமித்தமையின் மூலம் 1970களின் நடுப்பகுதியில் இதன் சேவைகள் மீளொழுங்குபடுத்தப்பட்டன. தலைமை அலுவலகத்தில் உள்ள பிரிவானது, சுகாதாரக் கல்வி உபகரண உற்பத்தி அலகுடன் இணைக்கப்பட்டு. சுகாதார அமைச்சின் கீழ் சுகாதாரக் கல்விப் பிரிவு எனும் தனி ஒரு பிரிவாக இயங்கத் தொடங்கியதுடன் இதற்குப் பொறுப்பாக நிர்வாக எல்லைக்குட்பட்ட பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படார். பிற்காலத்தில் இப்பதவியானது பணிப்பாளர் - சுகாதாரக் கல்வி மற்றும் பிரச்சாரம் என மாற்றம் பெற்றது. அடுத்த சில வருடங்களில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் சடுதியான அபிவிருத்தி ஏற்படுத்தப்பட்டு குடும்ப சுகாதாரப் பணியத்தின் வழியில் இவ் அமைப்பும் முழுமையான ஒரு பணியகமாகத் தோற்றம் பெற்றது. தற்போது சுகாதாரக் கல்விப் பணியகத்தின் உத்தியோகத்தர் குழாமானது ஒரு முழுநேரப் பணிப்பாளர், நான்கு சமுதாய மருத்துவ நிபுணர்கள், ஒரு சமுதாயப் பற்சிகிச்சை நிபணர், சுகாதாரக் கல்வியில் முதுகலைமாணித் தேர்ச்சி பெற்ற 5 சுகாதாரக் கல்வி உத்தியோகத்தர்கள் மற்றும் 2 பட்டமேற்படிப்பு தமைமையுள்ள பிரச்சார அலுவலர் என்பவற்றைக் கொண்டுள்ளது. அதிகரித்துவரும் தொற்றா நோய்களின் பாதிப்புகளும், ஆபத்துமிக்க விளைவுகளை ஏற்படுத்துகின்ற திடீரெனப் பரவும் தொற்று நோய்களும், வினைத்திறன் மிக்க சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகளைத் திட்டமிடுதல், செயற்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பாய்வு செய்தல் போன்றவற்றிற்கான அவசியத்தை உணர்த்தியுள்ளதுடன், சுகாதாரக் கல்விப் பணியத்தை சுகாதார மேம்பாட்டுப் பணியகமாக மாற்றுவதற்கும் அடிப்படைக் காரணமாக உள்ளது. தேசிய சுகாதார மேம்பாட்டுக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மூலோபாயங்களை, வினைத்திறன்மிக்க முறையில் செயற்படுத்துவதற்காக, சுகாதார மேம்பாட்டுப் பணியத்தில் பன்னிரண்டு விசேட பிரிவுகள் உள்ளன.